முன்னுரை


கீதகாங்கேயம் என்ற இந்த சிறுகாவியம், 20ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. நூலாசிரியர் கானாடுகாத்தான் ஸ்ரீ விசுவநாத கவி. அவரைப்பற்றிய செய்திகளும் , இந்நூலின் தேவநாகரி வடிவமும் இங்கு காணலாம்:


https://sanskritdocuments.org/doc_subrahmanya/gItagAngeyam.html


https://sanskritdocuments.org/doc_subrahmanya/gItagAngeyamsaTIka.html


(நூலை, தமிழ், மலையாளம், ஆங்கிலம் முதலிய இன்னும் பல லிபிகளிலும் மாற்றிக்கொண்டும் காணலாம் )


கீதகோவிந்தத்திலும் ஸ்ரீ ஜெயதேவரிடத்தும் கொண்ட பக்தியால் அவரைப்பின்பற்றி, அதே உவமைகளும் , அதே சொற்களும் கூட பல இடங்களில்  ஆசிரியர் கையாண்டிருந்தாலும், இக்காவியத்திற்கே என்றுள்ள புதுமைகள், பலவித சந்தங்களிலுள்ள சுலோகங்கள், முருகன் புகழை அற்புதமாக வர்ணிக்கும் பாட்டுக்கள் - இவற்றைப்பார்க்கும்போது, கலைமகளின் பூரண கடாட்சம் பெற்றவர் இக்கவி என்று அறியலாம். ஒவ்வொரு சர்க்கத்தின் முடிவிலும் அவர் கூறும் மிக அழகான பிரார்த்தனை சுலோகங்கள் சிறந்த பலச்ருதியாகவும் அமைந்துள்ளன. 


காவியங்களில் காணப்படும் நவரசங்களில் சிறப்பான இடம் சிருங்கார ரசத்துக்கு உண்டு. எத்தரப்பினரும் விரும்பும் சுவை இத்துறைக்கு உண்டு. கவிகளுக்கு மிக விருப்பமான ரசம் இது. மானிடர்க்குரிய பல்வேறு உணர்ச்சிகள் மற்றும் உறவுகளில், காதல் மட்டுமே தூய பக்திக்கு கொஞ்சம் அருகில் உள்ளது. ஒருவருக்காக மற்ற சுற்றத்தினரையெல்லாம் விட்டுவிடுதல், ஒருவரின் இன்பத்தில் தான் மகிழ்தல் போன்ற தியாகங்கள் சுலபமாகி, தெய்வத்திடம் செய்யும் பூரண அர்ப்பணத்துக்கு, சரணாகதிக்கு இனமாக உள்ளது என்பதால்தான், சான்றோர்கள்,  மதுரபாவம் என்றும்  “Bridal Mysticism” என்றும், அகத்துறை பாட்டுக்கள் என்றும், பக்தியையே காதலாக செய்வதை அங்கீகரித்துள்ளனர். அது மானிடபெண்களின் பக்தியாக பெரும்பாலும் இருக்கும். அத்துடன், ராதை, ஆண்டாள், பார்வதி, வள்ளி போன்ற தேவிமார்கள் பிராட்டி என்ற ஸ்தானத்தோடு, ஜீவாத்மா என்ற ஸ்தானத்தையும் கருணையுடன் ஏற்று, நமக்கு இறைவனை அடைவதற்கான வழியைக் காட்டுவதாகவும் நூல்களில் காண்கிறோம். 


ஞானமே வடிவான முருகப்பெருமான், சின்மயமான, ஜோதிமயமான மேனிகொண்டவன். அதேபோல வள்ளிப்பிராட்டியும் தெய்வீகப்பிறவி வாய்த்தவள். அதனால் சாதாரண மனிதர்க்குரிய உணர்ச்சிகளை அவர்களிடம் கற்பிப்பது நமது கவிதையின்பத்துக்காகவே என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். கண்ணனின் ராஸலீலையைப் படிப்பதால் உலகியல் ஆசைகள் அழிந்து, வைராக்கியம் தோன்றும் என்று காஞ்சி மஹாஸ்வாமிகள் முதலிய பெரியோர் உபதேசம் செய்துள்ளனர். அதேபோல இந்த காவியமும், பொருளறிந்து படிப்பதால், நமது பக்தியையும் விவேகவைராக்கியங்களையும் மேலும் உறுதிகொண்டதாக செய்யட்டும்.


காவியத்தின் அமைப்பு 


சர்க்கம் 1: ஸாமோத³-ஸோமோத³ய꞉ 


அஷ்டபதி 1   - முருகப்பெருமானின் அவதார வர்ணனை 


அஷ்டபதி 2   - முருகப்பெருமானின் லீலைகள் 


அஷ்டபதி 3   -  வள்ளியிடம் தோழி சொல்வதான வசந்தகால வர்ணனை 


அஷ்டபதி 4   -  வள்ளியிடம் தோழி சொல்வதான, முருகப்பெருமானின் முன்னிலையில் தேவமகளிரின் ஆடல்பாடல் .


சர்க்கம் 2: அக்லேஶ-ஶக்த்யாயுத꞉ 


அஷ்டபதி 5   -  வள்ளி தோழியிடம் முருகப்பெருமானை நினைத்து, அவரை வர்ணித்தல் 


அஷ்டபதி 6   -  வள்ளி தோழியிடம், தினப்புனத்தில் காவல் செய்துவந்த தன்னிடம், வேடனாகவும், வேங்கைமரமாகவும் , விருத்தனாகவும் வந்து விளையாடி, பிறகு தன்வடிவம் காட்டி மணந்துகொண்டதை விவரித்தல்.


சர்க்கம் 3: ஸுகுமார-குமார꞉


அஷ்டபதி 7   - முருகப்பெருமான் வள்ளிமலைக் காட்டில் வள்ளியைத்தேடிக் காணாமல், கொடிவீட்டில் அமர்ந்து அவளை நினைத்திருத்தல்.


சர்க்கம் 4 :ஸானந்த³-மஹாஸேன꞉


அஷ்டபதி 8 : தோழி முருகப்பெருமானிடம் வந்து, வள்ளி அவருக்காக ஆசையுடன் காத்திருப்பதை சொல்லுதல்.


அஷ்டபதி 9 : இதுவும் (8வது பாடலைப்போன்ற)  அதே பொருள் 


சர்க்கம் 5 : ஸோத்கண்ட²-ஶிதிகண்ட²ஜ꞉


அஷ்டபதி 10 : வள்ளியை அழைத்துவரும்படி முருகப்பெருமான் சொல்ல, தோழி திரும்பி  வந்து, அவரது அன்பையும் விரகத்தையும் வள்ளியிடம் சொல்லுதல் 


அஷ்டபதி 11 : இதுவும் (10வது பாடலைப்போன்ற)  அதே பொருள்


சர்க்கம் 6 : த⁴ன்ய-ஸுப்³ரஹ்மண்ய꞉


அஷ்டபதி 12 : தோழி முருகப்பெருமானிடம் மீண்டும் வந்து, பிரிவால் தளர்ந்த வள்ளியால் வரமுடியவில்லை என்றும் அவரே வரவேண்டும் என்றும் பிரார்த்தித்தல் .


சர்க்கம் 7 :நாக³ரிக-ஸேனாபதி

அஷ்டபதி 13 : இங்கு தனிமையில்  உள்ள வள்ளி, நிலவுதித்ததைக் கண்டு பிரிவினால் வருந்தி தன் நிலைமையை நொந்துக்கொள்ளுதல்.


அஷ்டபதி 14 : தோழி மட்டுமே திரும்பி வந்ததைப்பார்த்து வள்ளி மேலும் வருந்தி, வேறொருத்தியுடன் பெருமான் இருப்பதாக எண்ணி வர்ணித்தல்.


அஷ்டபதி 15 : இதுவும் (14வது பாடலைப்போன்ற)  அதே பொருள்


அஷ்டபதி 16 : இதுவும் (15வது பாடலைப்போன்ற)  அதே பொருள். தன்னை வருத்தும் பொருட்கள் அப்பெண்ணை ஒன்றும்செய்யாது என்று வள்ளி அயர்தல்.


சர்க்கம் 8 : விலக்ஷ-விஶாக


அஷ்டபதி 17 : காலையில் தன்னைத்தேடி வந்த பெருமானிடம் கோபித்து, சென்றுவாருங்கள் என்று வள்ளி சொல்லுதல்.


சர்க்கம் 9 : முக்³த⁴-ஶக்தித⁴ர


அஷ்டபதி 18 : பெருமானிடம் கோபிக்கவேண்டாம் என்று தோழி வள்ளிக்கு அறிவுறுத்தல்.


சர்க்கம் 10 : சதுர-ஷாண்மாதுர


அஷ்டபதி 19 : பெருமான் இனிமையான சொற்களால் வள்ளியை சமாதானப்படுத்துதல்.


சர்க்கம் 11 : ஸானந்த³-ஸ்கந்த³தே³வ


அஷ்டபதி 20 : தோழிமார் வள்ளியை அலங்கரித்து, பெருமானிருக்கும் கொடிவீட்டுக்கு செல்லலாம் என்று ஒரு தோழி  தூண்டுதல் 


அஷ்டபதி 21 : இளவேனில் காலத்துக் காட்டின் அழகை வர்ணித்து, அழகிய கொடிவீட்டுக்கு வர வள்ளியை தோழி ஊக்குவித்தல்.


அஷ்டபதி 22 : பெருமானின் இருப்பிடத்துக்கு வந்த வள்ளி கண்ட அவரது பேரழகின் வர்ணனை.


சர்க்கம் 12 : ஸுப்ரீத- ஸுப்³ரஹ்மண்ய


அஷ்டபதி 23 :  தன்னை நாடிவந்த வள்ளியை அன்புடன் எதிர்கொண்டு இன்பமொழிகளைக்கூறி பெருமான் அவளை மகிழ்வித்தல்.


அஷ்டபதீ³ 24 :  வள்ளியின் அணிகளைத் திருத்தி, பெருமான் அவளது சுற்றத்தினரின் சம்மதம்பெற்று மணந்து, அவளுடன் ஸ்கந்தகிரி அடைந்து, (பூர்வத்தில் தன் தங்கையான வள்ளியைக்கண்டு மகிழ்ந்த)  தெய்வானையிடம் சேர்தல்.




Comments

Popular posts from this blog

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்